ரமழான் மாதத்தை முன்னிட்டு இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கவென 50 தொன் பேரீச்சம்பழத்தை சவூதி அரேபியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இந்த பேரீச்சம் பழத் தொகுதியை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி (27) புத்தசாசனம், சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியிடம் கொழும்பில் கையளித்தார்.
இலங்கை முஸ்லிம்களுக்கென சவூதி அரேபியா அன்பளிப்பாக வழங்கியுள்ள பேரீச்சம் பழத் தொகுதியை, உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவம் கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்தில் இடம்பெற்றது. தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி, ‘இலங்கை சவூதியின் நீண்ட கால நட்பு நாடாகும். அந்த வகையில் இந்நாட்டின் சமூக, பொருளாதார, உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பல்வேறு உதவி, ஒத்துழைப்புக்களை சவூதி வழங்கி வருகின்றது. அதற்கேற்ப இம்முறையும் சவூதியின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண அமைப்பின் ஊடாக 50 தொன் பேரீச்சம் பழம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சமய விவகார அமைச்சர், இந்த உதவியின் நிமித்தம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ச வூதி அரேபியாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாட்டின் 2741 பள்ளிவாசல்கள் உள்ளன. அப்பள்ளிவாசல்கள் ஊடாக இவற்றைப் பகிர்ந்தளிக்க ஏற்பாடுகள் செய்வதாகக் கூறினார்.