கல்கியின் புகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் எதிர்வரும் 30ஆம் திகதி திரையில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஐஸ்வர்ய லட்சுமி என முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்-1′ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை நேற்று வெளியானது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிடப்பட்டது.
பொன்னியின் செல்வன்-1’ டிரைலர், இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட முன்னணி நடிகர்கள் பங்கேற்றனர். திரைப்படத்தின் டிரைலர் 3.23 நிமிடங்கள் உள்ளது. ‘பொன்னியின் செல்வன்-1’ டிரைலர் வெளியான நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.