வாசிப்பு பழக்கம் அறிவு மற்றும் மதிநுட்பம் நிறைந்த மனிதரை உருவாக்கும் என கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட 6 பாடசாலைகளுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில் கொட்டகலை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று (04.10.2022) வாசிப்பு புத்தகங்கள் மாணவர்களுக்கு கொட்டகலை பிரதேச சபையில் வழங்கி வைக்கப்பட்டது.

இநந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பிரதேச சபை உப தலைவர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாசிப்பின் மூலம் ஞாபக சக்தி அதிகரிப்பு, பகுத்தறிவு திறன் அதிகரித்தல், சொல்லாற்றல் அதிகரித்தல், எழுதும் திறன் அதிகரித்தல், மன ஒருமைப்பாடு அதிகரித்தல்,  மன அமைதி எனப் பல்வேறு பயன்கள் எமக்கு இலவசமாக கிடைக்கின்றன.

குறிப்பாக வாசிக்கும் பழக்கத்தை கொண்ட மக்களை அதிகமாகக் கொண்ட நாடுகளே இன்றைய உலகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்திகளாகவும் திகழ்கின்றனர். ஆக சிறந்த வேலை வாய்ப்புகளையும் சிறந்த பொருளாதார வல்லமை கொண்ட நாட்டையும் கட்டியெழுப்ப அறிவு அவசியமானது. அதற்கு வாசிப்பு பழக்கமும் அச்சாணியாக விளங்குகின்றது.

இறுதியாக தனிநபரினதும் சமூகத்தினதும் வெற்றிக்கு வாசிப்பு ஓர் பிரதான காரணமாகத் திகழ்கின்றது. இதற்காக முதலில் பிள்ளைகளிற்கு வாசிப்பு ஓர் மகிழ்ச்சியான செயல் என உணர்த்துவதுடன் அதற்காக சில வசதி வாய்ப்புகளை பெற்றோரும் ஆசிரியர்களும் ஏற்படுத்தித் தர வேண்டும். அதனூடாக சிறந்த பிரஜைகளைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே அனைவரதும் அவாவாகும்.

தற்போதைய பிள்ளைகள் மற்றும் மக்களிடம் வாசிப்பு ஆர்வம் குறைந்து காணப்படுவதாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் சமூகத்தை பீடித்துள்ள சமூக ஊடகங்கள் அதற்கு காரணமாக இருப்பதாகவும் மீளவும் புத்தகங்களை வாசிப்பதில் மாணவர்களை ஈடுபடுத்தி இலக்கிய இரசனையுடைய, அறிவுமிக்க சமூகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

(க.கிஷாந்தன்)