முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருந்து பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அங்கு தற்போது அவர் தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிங்கப்பூரில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஷ மேலும் மூன்று பேருடன் சிங்கப்பூர் விமானம் மூலம் தாய்லாந்து வந்தடைந்தார்.

குறித்த விமானம் தாய்லாந்தின் ஃபூகெட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி அங்கு சென்றமை பற்றிய தகவல் வெளியானதையடுத்து விமானம் பெங்கொக்கில் உள்ள இராணுவ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை எனவும், அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஹோட்டலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.