இலங்கை அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டின் செயற்திட்டங்களை இலங்கையில் முதன்முதலாக விபுலானந்த அடிகள் பிறந்த காரைதீவில் முன்னெடுக்கப்பட்டது.
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அடுத்த ஆண்டை (2023) நாவலர் ஆண்டாக ஜனாதிபதி முன்னிலையில் பிரகடனப்படுத்தி இருந்தது .
அந்த நாவலர் ஆண்டின் 17 செயற்றிட்டங்களில் ஒன்றான வீதி ஒன்றிற்கு “நாவலர் வீதி” என பெயர் சூட்ட காரைதீவு பிரதேச சபை நேற்று முன்தினம் சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது.
இலங்கையில் முதன்முதலாக வடக்கில் நல்லூரில் பிறந்த நாவலர் பெருமானுக்கு கிழக்கில் காரைதீவில் பிறந்த விபுலானந்த அடிகளாரின் கோட்டையில் முதல் கௌரவம் வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த நிகழ்வு காரைதீவு பிரதேச சபையில் நேற்று முன்தினம் சம்பிரதாய பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அங்கு நாவலர் ஆண்டை முன்னெடுக்க பிரகடனம் செய்யப்பட்டது.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில், காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் முன்னிலையில், ஆன்மீக ஆர்வலர் உதவிக்கல்விப்பணிப்பாளர் வீ.ரி. சகாதேவராஜா முன்மொழிந்து நாவலர்ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த பிரகடன நிகழ்வில், உத்தியோக பூர்வமாக நாவலர் பெருமானின் திருவுருவப்படம் தவிசாளரிடம் கையளிக்கப்பட்டது.
மேலும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட நாவலர் பெருமானின் நூல்கள் நூல்கள் அங்கு தவிசாளர், சபை உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர் ,மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் உரையாற்றுகையில்.. “இலங்கையில் முதல் முதலாக காரைதீவு பிரதேசத்தில் நாவலர் ஆண்டு முன்னெடுக்கப்படுவது பெருமைக்குரியது. இந்த சபையிலே அத்தகைய தீர்மானத்தை முன்னெடுத்து இருப்பது வரலாற்று பெருமைக்குரியது “என்று தெரிவித்தார்.
காரைதீவு பிரதேச இந்துசமய கலாச்சார உத்தியோகத்தர் திருமதி சிவலோஜினியும் கலந்து கொண்டார்.
( சகா)