பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் நாடு முழுவதும் பதற்றமாக சூல்நிலை நிலவுகிறது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜிநாமா செய்துவிட்டு இராணுவ ஹெலிகொப்டர் மூலம் இந்தியாவுக்குப் புறப்பட்டதாகவும் அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பங்களாதேஷ் சட்டத் துறை அமைச்சர் கூறுகையில், இங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றுகிறது.
பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி, தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால், முன்னெச்சரிக்கையாக, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.