உயிரியல் முறையில் (பயோ) டீசல் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படும் இளைஞனுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடி பாராட்டியுள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த திலிண தக்சீல எனும் 23 வயதான இளைஞர் ஒருவர் தேங்காய் எண்ணெய்யிலிருந்து உயிரியல் டீசல் கண்டுபிடித்துள்ளதாக நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியிருந்தது.
அது குறித்து முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார். உடனடியாக குறித்த இளைஞனை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட பிரதமர் ரணில், பயோ டீசல் தொடர்பான விபரங்களை கேட்டறிந்துள்ளார்.
அத்துடன் திலிண தக்சீல தயாரிக்கும் பயோ டீசலின் தரம் மற்றும் அதனைக் கொண்டு வாகனங்களை இயக்கும் சாத்தியம் குறித்து பரீட்சித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பெட்ரோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.