சிங்கபூரில் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில், 12 பேர்கொண்ட இலங்கை மகளிர் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால தாமதம் மற்றும் சர்ச்சைகளுக்கு பின்னர் குறிப்பிட்ட இந்த குழாத்துக்கு இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை குழாத்தின் தலைவியாக கயான்ஜலி அமரவன்ச பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவியாக டுலாங்கி வன்னிதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் இலங்கை மகளிர் வலைப்பந்தாட்ட குழாத்துக்குள் மீண்டும் முன்னணி வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை வலைப்பந்தாட்டத்தில் மாத்திரம் இல்லாமல் சர்வதேச வலைப்பந்தாட்ட போட்டிகளில் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்துவரும் இவர், உலகின் சிறந்த ஷூட்டர் என்ற பெருமையை தக்கவைத்திருக்கிறார். அதுமாத்திரமின்றி அறிவிக்கப்பட்ட குழாத்தை பொருத்தவரை, தர்ஜினி சிவலிங்கம் அதிகூடிய சர்வதேச அனுபவத்தை கொண்டுள்ள வீராங்கனையாக இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு மாலைத்தீவுகளில் நடைபெற்ற விளையாட்டு விருது வழங்கும் விழாவில் மதிப்புமிக்க ‘ஸ்போர்ட்ஸ் ஐகொன்’ விருதினை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பாவான் சனத் ஜயசூரியவுடன், தர்ஜினி சிவலிங்கம் வென்றிருந்தார்.