ஒவ்வொரு மணித்தியாலயத்திலும் குறைந்தது 32 இலங்கை பிரஜைகள் வெளிநாடு செல்வதாக சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியதாகக் கூறியுள்ள நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய, இது ஒரு நாட்டின் விரைவான வீழ்ச்சிக்கு அறிகுறியாகும் என்று தெரிவித்துள்ளார். 

சிலாபத்தில் இடம்பெற்ற நிக்ழ்வில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 

கடந்த 8 மாதங்களில் 500 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பொறியியலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான புத்திஜீவிகள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். கடும் ஏமாற்றத்தையும் எதிர்கொண்டு, குறைந்த பட்சம் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். 

இலங்கையில் பல்கலைக்கழக கல்விக்கு தேவையான வசதிகள் இல்லாத நிலையில், தற்போது பெற்றோர்கள் பிள்ளைகளுடன் வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக தமது சொத்துக்களை விற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

எமது எதிர்கால தேசிய வளங்களை இழக்கின்றோம்.இவை அனைத்தும் இலங்கையின் இலவசக் கல்வி முறையின் மூலம் உருவாக்கப்பட்ட தனிமனிதர்கள். இவை ஒரு நாட்டின் வேகமான வீழ்ச்சிக்கான அடையாளங்கள். இதில் ஒரு நாடு அபிவிருத்தியடையவோ முன்னேற முடியாது. இலங்கை இயற்கை வளங்கள் மற்றும் சிறந்த புவியியல் இருப்பிடம் உள்ள நாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.